ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

54

ஒருவழிப்பாதையில் தவறாக வந்த காரை தடுத்து நிறுத்திய இளைஞருக்கு சரமாரி அடி, உதை!

வாகன எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலும், அதற்கு இணையான அளவு போக்குவரத்து விதிமீறல்களும் அன்றாடம் பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது.

ஒருவழிப்பாதையில் கண்மூடித்தனமாக வருவது, சிக்னல் ஜம்ப், பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் இருசக்கர வாகனங்களை செலுத்துவது உள்ளிட்டவை அன்றாடம் காணும் நிகழ்வுகள்தான். ஆனால், சில நேரங்களில் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, போலாசாரும், பிற வாகன ஓட்டிகளும் தக்க பாடம் புகட்டுவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம்.

எல்லா இடத்திலும் போலீசாரை எதிர்பார்ப்பதும் கடினம். அதேநேரத்தில், இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடுவோரை தட்டி கேட்பதற்கு, போதிய அவகாசமும், துணிவும் பலருக்கும் இருப்பதில்லை. தேவையில்லாத வேலை. அனாவசியமான டென்ஷன் என்று ஒதுங்கி செல்ல நேரிடுகிறது.

ஆனால், ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் திமிராக வந்த பொலிரோ எஸ்யூவி ஓட்டுனரை பைக்கில் வந்தவர் தில்லாக தடுத்து நிறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. போபால் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தூரை சேர்ந்த நிலே வர்மா என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டு, பொாலிரோ ஓட்டுனரின் தவறை துணிவுடன் தட்டிக் கேட்ட பைக் ஓட்டுனரை பாராட்டி இருக்கிறார். வீடியோவில் பரபரப்பான போக்குவரத்து நிலவும் வேளையில், பொலிரோ எஸ்யூவி ஒன்று ஒருவழிப்பாதையில் எதிராக வருகிறது.

அப்போது, அந்த வழியில் பைக்கில் வந்த இளைஞர் பொலிரோ எஸ்யூவிக்கு நேராக நிறுத்தி, பின்புறமாக செல்ல சொல்கிறார். இந்த வழியில் வந்தது தவறு என்பதை சுட்டிக் காட்டும் விதத்தில் சொல்கிறார். மாறாக பொலிரோவில் வந்தவர், அந்த பைக் மீது மோதுவது போல முன்னேறுகிறார்.

அதற்கும் அசங்காமல் அந்த பைக் ஓட்டுனர் நிற்பதை பார்த்து, ஆத்திரமடைந்த பொலிரோ ஓட்டுனர் இறங்கி வந்து வாக்குவாதம் செய்கிறார். ஆனால், பின்னால் சென்று உரிய வழியில் செல்ல வேண்டும் என்பதில் பைக்கில் வந்த இளைஞர் பிடிவாதமாக இருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த பொலிரோ ஓட்டுனர், பைக்கில் வந்த இளைஞரை அடித்து, உதைத்து சரமாரியாக தாக்குகிறார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதுதான் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி இருக்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏராளமான பகிர்வுகளையும், விருப்பங்களையும் பெற்றிருக்கிறது. அத்துடன், பொலிரோ ஓட்டுனருக்கு தக்க பாடம் புகட்டிய இளைஞருக்கு பாராட்டும், பொலிரோ ஓட்டுனருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்ட பொலிரோ ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு தக்க பாடமாக இருக்கும் என்று நம்பலாம்.

அந்த இளைஞர் தில்லாக தடுத்து நிறுத்தி தர்க்கத்தில் ஈடுபடுவதையும், அந்த வழியாக செல்வோர் அந்த இளைஞருக்கு ஆதரவாக இல்லாமல், அதனை வேடிக்கை பார்த்தபடியே கடந்து செல்வதையும் வீடியோவில் காணலாம்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments